தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 24ம் தேதி தனது உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.
தூத்துக்குடி கே.டி.சி.நகர், இ.பி.காலனியைச் சேர்ந்த அல்பட்ரோஸ் மகன் இக்னேஷியஸ் நோபல் (வயது 46). இவர் கடந்த 24ம் தேதி மாலை தனது உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதிலிருந்த 1¾ (ஒன்றே முக்கால்) சரவன் நகை திருடு போயிருந்தது. மேலும் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததால் கேமராவின் ஸ்டோரேஜ் பகுதியான Hard disk-ஐ மர்ம நபர்கள் திருச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இக்னேஷியஸ்நோபல் அளித்த புகாரின்பேரில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






