2026-ல் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி - நயினார் நாகேந்திரன்

அண்ணாமலை புயலாக இருந்தால், நான் தென்றலாகத்தான் இருக்க முடியும் என நயினார் நாகேந்திரன் பேசினார்.
சென்னை,
தமிழக பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
என் மீது நம்பிக்கை வைத்து மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க தலைமைக்கு நன்றி. தமிழகத்தில் பாஜக முன்னவர்கள் ஒவ்வொரு படியாக கட்சியை வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு படியாக கட்டப்பட்ட பாஜக கோபுரத்தின் மீது கலசம் வைத்தவர் அண்ணாமலை. கலசம் மீது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் குடமுழுக்கு நடத்தப் போகிறோம். 2026-ல் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி. நிச்சயமாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும். தாமரை மலர்ந்தே தீரும்.
அண்ணாமலை புயலாக இருந்தால், நான் தென்றலாகத்தான் இருக்க முடியும். அதிமுகவில் இருந்தபோதே பாஜகவிற்கு வர வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவார். பாஜகவில் முக்கிய பொறுப்பு தரவில்லையென கோபமும், வருத்தமும் இருந்ததுண்டு. தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி, பெண்களை மதிக்காத ஆட்சியாக இது நடக்கிறது. இந்த ஆட்சியை வெகு விரைவில் விரட்டியடிக்க வேண்டும். அதற்கு பாடுபட வேண்டும். "
இவ்வாறு அவர் பேசினார்.






