சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னருக்கு நேரில் அழைப்பு: சபாநாயகர் அப்பாவு

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை,
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கவர்னர் பேசியது தவறு. கோர்ட்டு தீர்ப்பையோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதிையயோ எதிர்த்து தமிழக அரசு செயல்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பை பயன்படுத்தி வருகிறோம்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் சட்டம் -ஒழுங்கு சரியாக உள்ளது என்று கவர்னர் பலமுறை சொல்லி இருக்கிறார். இப்போது என்ன நோக்கத்திற்காக நீதிபதிக்கு அச்சுறுத்தல் என்று கவர்னர் சொல்கிறார் என தெரியவில்லை. தமிழக அரசும், கவர்னரும் இணக்கமாகத்தான் இருக்கிறோம். அதனால் தான் வருகிற 20-ந் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் நேரில் சென்று முறைப்படி அதற்கான அழைப்பு கொடுக்கப்படும்.
மத்திய மந்திரி அமித்ஷாவின் ஊழல் குறித்த ஆதாரங்கள் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கையில் இருப்பதாக சொல்லி இருக்கிறார். ஆனால் அமித்ஷா மீது சி.பி.ஐ. ஆதாரங்கள் இருந்தாலும் நடவடிக்கை எடுக்காது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கலவரம் ஏற்படுத்த நினைப்பவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். தி.மு.க. -பா.ம.க. கூட்டணி தொடர்பாக இரு தலைவர்களும் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






