காதலியை சந்தித்தபோது விபரீதம்? - மாடியில் இருந்து விழுந்த ‘ஜிம் மாஸ்டர்' படுகாயம்


காதலியை சந்தித்தபோது விபரீதம்? - மாடியில் இருந்து விழுந்த ‘ஜிம் மாஸ்டர் படுகாயம்
x

கோப்புப்படம்

மாடியில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்த ‘ஜிம் மாஸ்டருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


சென்னை புதுப்பேட்டை நரியன்காடு பகுதியை சேர்ந்தவர் ஜான் சேவியர் (வயது 21). சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்துவிட்டு ‘ஜிம் மாஸ்டராக' வேலை பார்த்தார். நேற்று காலை ஜான் சேவியர், எழும்பூர் நரியன்காடு போலீஸ் குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வாலிபரிடம் விசாரித்தனர்.

விசாரணையில், நரியன்காடு போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் ஏட்டு ஒருவரின் மகளான 18 வயது கல்லூரி மாணவிக்கும், ஜான் சேவியருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவரை சந்திக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும் தெரியவந்தது. கல்லூரி மாணவியும், ஜான் சேவியரும் காதலித்து வந்தனர், வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் காதலியை ஜான் சேவியர் பார்க்க சென்றார்.

இதை பார்த்த மாணவியின் உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தில் மாடியில் இருந்து ஜான் சேவியர் தவறி விழுந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் உண்மை நிலவரங்கள் போலீசாரின் விசாரணை முடிவிலேயே தெரியவரும். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story