தூக்கில் பிணம்: சாத்தூர் எஸ்.ஐ.யின் மனைவி இறப்பில் மர்மம் என உறவினர்கள் புகார்


தூக்கில் பிணம்: சாத்தூர் எஸ்.ஐ.யின் மனைவி இறப்பில் மர்மம் என உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 14 Dec 2025 12:32 PM IST (Updated: 14 Dec 2025 12:34 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஐ.யின் மனைவி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ.) அருண்குமார் (வயது 31). இவருடைய மனைவி இளவரசி (26). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சாத்தூர் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று பணி முடிந்து அருண்குமார், வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒரு அறையில் இளவரசி தூக்கில் பிணமாக தொங்கினார். அதே நேரத்தில் மற்றொரு அறையில் செல்போனை கையில் வைத்து குழந்தை விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இளவரசி உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளவரசி உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை நடந்தது. அப்போது, அவரது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில், அதில் “நான் செல்கிறேன்...குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நன்றாக படிக்க வையுங்கள்” என்று பதிவிட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் இளவரசியின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது, “இளவரசியை கொன்று தூக்கிலிட்டு நாடகமாடி இருப்பதாக சந்தேகம் எழுகிறது. இளவரசி சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். மர்மம் இருப்பதால் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரை கைது செய்ய வேண்டும்” என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ் குமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரையும் கலைந்து போக செய்தனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,“ இளவரசியின் தந்தை கருப்பசாமி புகார் அளித்துள்ளார். எஸ்.ஐ. அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்த இருக்கிறோம். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இளவரசியின் சாவுக்கான காரணம் பற்றி கூற முடியும்.

அந்த புகாரில், வேறு பெண்ணுடன் அருண்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், புதிய கார் வாங்குவதற்கு பெற்றோரிடம் பணம் வாங்கி வரச் சொல்லி இளவரசிக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதன்காரணமாக இளவரசி கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், எனவே அருண்குமார் மற்றும் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

1 More update

Next Story