ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம்தோறும் கலெக்டர் தலைமையில் குழு - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, 2 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் போலீஸ்காரர்களை ஆர்டர்லியாக வேலைக்கு அமர்த்துவதை தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனாலும், ஆர்டர்லி முறை நடைமுறையில் இருந்தது. இதுதொடர்பான வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் விசாரித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ். ராமன், ஆர்டர்லி முறையை பின்பற்றக்கூடாது என மாநில அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். வேண்டுமானால் இதனை கண்காணிக்க மாநில அளவில் குழு அமைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ''ஆர்டர்லி முறை ஒழிக்கவும், ஆர்டர்லி முறை குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் குழுவை அமைக்கிறோம். அந்த குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, 2 போலீஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும். இந்த குழு அமைப்பது தொடர்பான உத்தரவை 2 வாரங்களில் உள்துறை செயலாளர் உத்தரவிட வேண்டும். விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.






