வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசம்: நேரில் பார்த்த மனைவி ..அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்

பிதானுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு தொடர்ந்து இருந்துள்ளது. இதனை அறிந்த ஜிண்டி தட்டி கேட்டார்.
கோவை,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிதான் (வயது33). இவரது மனைவி ஜிண்டி(36). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பிதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். அங்கு கணபதி நாராயணசாமி நகர் தெருவில் குடியிருந்து அத்திப்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பிளம்பர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வேறு சில பெண்களுடன் பழக்கம் இருப்பதாக அசாமில் இருந்த மனைவி ஜிண்டிக்கு தகவல் கிடைத்தது.அவர் குழந்தையை பெற்றோர் பராமரிப்பில் விட்டுவிட்டு கோவைக்கு வந்தார். கணவருடன் கடந்த 6 மாதமாக தங்கி வேலை பார்த்து வந்தார். ஜிண்டி தன்னுடன் இருந்தாலும் பிதான் அவரது பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு தொடர்ந்து இருந்துள்ளது. இதனை அறிந்த ஜிண்டி தட்டி கேட்டார்.
பிதான் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஜிண்டி வெளியில் சென்றிருந்தார். அந்த நேரத்தில் பிதான் வேறொரு பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்து அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென்று ஜிண்டி வீட்டிற்கு வந்து விட்டார். இதனை பார்த்ததும் அவருக்கு கணவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
அவர் தனது கணவருடன் தகராறில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர். பிதான் நேற்று முன்தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். அதன் பிறகு தூங்க சென்று விட்டார். ஆனால் கணவர் மீதான ஆத்திரம் ஜிண்டிக்கு தீரவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்த அவர், கத்தியால் கணவரின் மர்ம உறுப்பை அறுத்தார்.
அதிர்ச்சி அடைந்த பிதான் வலியில் கத்தியுள்ளார். உடனே, ஜிண்டி வீட்டிற்கு வெளியில் சென்று கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பிதானின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து கதவை திறந்து பார்த்தபோது பிதான் வலியால் துடித்து கொண்டிருந்தார். போலீசார் விரைந்து சென்று பிதானை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜிண்டியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.






