எச்.வி. ஹண்டே எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை - மு.க.ஸ்டாலின்

99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 1984-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் எம்.ஜி.ஆர். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிட்டவர்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி டாக்டர் எச்.வி. ஹண்டேவை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்தநிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில்,
நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்த தமது பார்வைகளை முன்வைத்தும் - தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு பொழிந்தும் முன்னாள் அமைச்சர் திரு. எச்.வி. ஹண்டே அவர்கள் எழுதும் கடிதங்கள் எப்போதும் எனக்கு ஊக்கமளிப்பவை. 99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன் என அதில் பதிவிட்டுள்ளார்.






