‘தனி ஆள் இல்ல கடல் நான்...' - மாநாட்டில் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்

மதுரை மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மதுரை,
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான த.வெ.க. தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டில் பேசிய விஜய், த.வெ.க.வின் கூட்டணி நிலைப்பாடு, கொள்கை எதிரி, அரசியல் எதிரி, கட்சியின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றினார். மேலும் மதுரை மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முன்னதாக மாநாடு தொடங்குவதற்கு முன், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 300 அடி நீள ரேம்ப் மீது நடந்து சென்று தொண்டர்களின் உற்சாக வரவேற்பை விஜய் ஏற்றுக்கொண்டார். அப்போது ரேம்ப் மீது ஏறி விஜய்யை நெருங்க முயன்ற சில தொண்டர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். தொண்டர்கள் வீசிய கொடிகளை பிடித்து விஜய் தனது கழுத்தில் அணிந்து கொண்டார்.
இந்த நிலையில், மாநாட்டில் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உங்க விஜய் உங்க விஜய், உயிரென வர்றேன் நான். உங்க விஜய் உங்க விஜய், எளியவன் குரல் நான். உங்க விஜய் உங்க விஜய், தனி ஆள் இல்ல கடல் நான்” என்ற வரிகளை விஜய் பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் நேற்று த.வெ.க. மாநாட்டில் வெளியிடப்பட்ட கட்சி பாடலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.






