வெட்கமும் இல்லை... கோபமும் இல்லை; எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன்: கமல்ஹாசன்


வெட்கமும் இல்லை... கோபமும் இல்லை; எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன்: கமல்ஹாசன்
x

வெளியில் போகும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

சென்னை,

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. ஒன்று தாய்மொழி, ஒன்று ஆங்கிலம் மற்றொரு மொழி கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மொழி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு 6 மொழி தெரியும். எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் தான்.

போர் என்றால், நமக்கு ஆங்கிலம் தான் கேடயம் என்று கருணாநிதி அன்று கூறினார். அது சொல்லி ரொம்ப நாட்களாகிவிட்டது. போருக்கு நாள் குறிக்கும் பழைய பஞ்சாங்கத்தை தூக்கி போட்டுவிட்டு, புதிதாக நாம் சொல்வோம். நாம் குறிக்கிற தேதி, எதிர்காலத்தில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக குறிக்கப்படும் தேதி. அது நடந்தே தீரும்.

எனக்கு பிடித்த மய்யத் தூண் திருவள்ளுவர். அவர் பிடித்த தராசின் முள்ளாக நம் தலைவர்கள் எல்லாம் நின்றே ஆக வேண்டும். அவர்களுக்கு அடிவருடுவதில் எனக்கு வெட்கமும் இல்லை. கோபமும் இல்லை. என் கடமை. இந்த கூட்டத்தில் அளந்து பேசவேண்டியதில்லை. ஆனால் வெளியில் போகும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். அது எனக்கு தெரியும்.

இன்று என்னை பலர் என்னென்னெவோ சொல்லி கூப்பிடுகிறார்கள். எல்லாம் எனக்கு பொருந்தும். எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன். எனக்கு நீ வேஷம் கட்ட வேண்டாம். நான் வேஷம் கட்டச் சொல்லி, டைரக்டும் செய்து இருக்கிறேன். சரித்திரம் வேறு, புராணம் வேறு என்று புரிந்தவர் யாம். மீன் எங்கள் கொடியில் இருக்கும், புலி எங்கள் நெஞ்சில் இருக்கும், வில் எங்கள் கையில் இருக்கும். ஆங்கிலத்தில் ‘வில்' இருந்தால் வழி உண்டு. அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறோம். அதைத் தான் தொடர்ந்து செய்வோம். அதற்கு தோள் கொடுப்பதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

எனக்கு 3 அம்மாக்கள். எனை பெற்றெடுத்த அம்மா இறந்துவிட்டார்கள். மிச்சம் இருப்பது என் சினிமா, இந்திய தாய். இந்த 2 தாய்களுக்காக என் 2 தோள்களும் இருக்கும். என்னை யாரும் இடது பக்கமும் இழுத்துவிட முடியாது. வலது பக்கமும் இழுத்துவிட முடியாது. என் பெயர் கமல்ஹாசன். நான் இந்த குளத்தில் தான் பூப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story