தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி


தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி
x

தவெக தங்களது தலைமையில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

திருப்பூர்

திருப்பூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் தங்களது தலைமையில் புதிய அணியை வலுவாக கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே வலுவாக உள்ள திமுக, என்டிஏ கூட்டணியிலுள்ள சில கட்சிகளுடனும் தவெக கூட்டணிக்காக பேசி வருகிறது.

தவெக தலைமையில் ஒருவேளை கூட்டணி அமைந்தால், என்டிஏ கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மீதான தனிப்பட்ட வருத்தத்தினால் இதை சொல்லவில்லை. யதார்த்தத்தை சொல்கிறேன்.

திமுக மீது நகராட்சி துறை உட்பட பல்வேறு துறைகளில் ஊழல் முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் உள்ளன. பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னார்கள். பகுதிநேர மருத்துவர்கள், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்னார்கள். செய்யவில்லை.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவோம் என்று சொன்னார்கள். எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வந்தது என்று தெரியவில்லை. வெளிநாட்டு முதலீடுகள் மூலம் என்ன வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது? எத்தனை தொழிற்சாலைகள் வந்திருக்கிறது? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் வந்திருக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை.

இப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத சூழலிலும், பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி முழுவதும் வெற்றி பெற்றுள்ளது. எனவே திமுகவை உண்மையிலேயே வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிற கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மிருக பலத்தோடு, ஆட்சி அதிகாரத்தோடு இருக்கிற திமுகவை வீழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story