'இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை படிப்பார்கள்' - திருமாவளவன்

இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை தேடிப் படிப்பார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களே வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வரும்போது, இந்தி படிப்பதால் எங்கே வேலை கிடைக்கும் என்பதை பா.ஜ.க.வினர் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்து கொண்டே பா.ஜ.க.வினர் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்படுவது கண்டனத்திற்குரியது.
இந்தி மொழி பயன்தரும் என்றால் தமிழக மக்களே அதை தேடிப் படிப்பார்கள். யாரும் அதை தடுக்க முடியாது. ஆனால் இதை அவர்கள் ஒரு கொள்கையாக வரையறுத்து, கட்டாயமாக்கி, அரசு பள்ளிகளில் திணிக்க முயற்சிப்பதைத்தான் நாம் எதிர்க்கிறோம்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.






