கட்சியில் வருத்தங்கள் இருந்தால் அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது” - செல்லூர் ராஜு

கட்சிக்கு நன்மை செய்வார்களை வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்துவதாக செல்லூர் ராஜு பேசினார்.
மதுரை,
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசுகையில்,
“யார் இந்த கட்சிக்கு நன்மை செய்வார்களோ அவர்களை வைத்துக் கொண்டு பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) கட்சி நடத்துகிறார். இதுதான் ஒரு கட்சியின் தலைமைப் பண்பு. ஒரு தலைமை என்று உருவாக்கிட்டால் அந்த தலைமை சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தலைவரைக் கேட்காமல் செய்யக்கூடாது. ஊடகங்கள் மூலமாக என்னுடைய கருத்தைச் சொல்லுவது கூடாது. எனக்குக் கூட மன வருத்தம் இருக்கும். வருத்தம் இருக்கிறது என்பதற்காக நான் பொது வெளியில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?
ஒவ்வொருத்தனுக்கும் ஒரு மன வருத்தம் இருக்கும். ஈகோ பிரச்சினை இருக்கும். அதனைப் பொதுவெளியில் காட்டக்கூடாது. அது தொடர்பாகப் பொதுச்செயலாளரிடம் முறையாக முறையிட்டு அவரிடம் சொல்ல வேண்டும் என்று தான் சொல்கிறேன். என்னை சொல்லவில்லை. எனக்கு ஒன்றும் மனவருத்தம் இல்லை. என்னை நல்லா தான் வச்சிருக்காரு.”
இவ்வாறு அவர் பேசினார்.






