காங்கிரஸ் கட்சியை மதிக்கவில்லை என்றால்.... மாணிக்கம் தாகூர் எம்.பி. பரபரப்பு பேட்டி


காங்கிரஸ் கட்சியை மதிக்கவில்லை என்றால்.... மாணிக்கம் தாகூர் எம்.பி. பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2025 12:58 PM IST (Updated: 23 Oct 2025 1:02 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை பெற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் பலரது விருப்பம் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்,

விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்கிறது. உயர்த்தப்பட்ட ரெயில் கட்டணமும் குறையவில்லை. பா.ஜனதா அரசுக்கு இதைப்பற்றி கவலையில்லை. மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு சாதாரண மக்களைப் பற்றி கவலையில்லை.

சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா? என்பதை காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும். இருப்பினும், விருதுநகர் காமராஜர் பிறந்தமண் என்பதால் இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எடுத்துரைக்கும். அதிக இடங்களை பெற வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சியில் பலரது விருப்பம். வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து காலம்தான் பதில் சொல்லும்.

இந்தியா கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதிலும், விட்டுக்கொடுப்பதிலும் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது. கூட்டணியில் விட்டுக்கொடுப்பது மட்டும் காங்கிரசின் வேலையாக இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் வாக்கை வாங்கிக் கொண்டு அமைச்சராக இருக்கலாம் என எந்த கட்சி நினைத்தாலும் அது நடக்காது.

காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை தர வேண்டும். அவ்வாறு செய்தால் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பிரசாரத்திற்கு வருவார்கள். வெற்றி பெற அனைவரும் பாடுபடுவோம். காங்கிரஸ் கட்சியை மதிக்கவில்லை என்றால் முதல்-அமைச்சராக வர முடியாது. நிலைமை வேறு மாதிரியாக்தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story