திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் நெருக்கம் சாதாரணமாகி வருகிறது: மதுரை ஐகோர்ட்டு கருத்து


திருமணத்துக்கு முன்பு ஆண், பெண் நெருக்கம் சாதாரணமாகி வருகிறது: மதுரை ஐகோர்ட்டு கருத்து
x

உணர்ச்சி ரீதியான ஈர்ப்புக்கும், உடல் ரீதியான உறவுக்கும் இடையில் உள்ள கோடு தெளிவற்றது என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

மதுரை,

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர், 2020-ம் ஆண்டில் மதுரையில் ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த ஒரு வாலிபருடன் பழகி வந்தார். அப்போது பெண் வக்கீலை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உறவு கொண்டதாகவும், ஆனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார் எனவும் மகளிர் போலீசில் கடந்த ஜனவரி மாதம் புகார் செய்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த வாலிபர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் அபுல்கலாம் ஆசாத் ஆஜராகி, மனுதாரர் தன்னுடன் பழகிய பெண் வக்கீலிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அதனை நிறைவேற்ற தவறிவிட்டார். அவர் மீதான நடவடிக்கை சட்டப்பூர்வமானது என வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரருக்கும், புகார்தாரருக்கும் இடையிலான உறவு 2020-ம் ஆண்டில் இருந்து சில மாதங்கள் வரை நீடித்து இருக்கிறது என்பது பல்வேறு ஆவணங்கள் மூலம் தெரிகிறது. புகார் அளித்தவர் ஒரு சட்டம் படித்தவர். வக்கீலாக பயிற்சி பெற்று வருகிறார். ஒருவருடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிவார். அந்த வகையில் இருவரும் பழகியபோது பெண் வக்கீலை ஏமாற்றும் நோக்கம் மனுதாரருக்கு இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தற்போது சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை இந்த கோர்ட்டு கவனத்தில் கொள்கிறது. அதாவது, வயது வந்தவர்கள் திருமணத்துக்கு முன்பு நெருக்கமாக இருப்பது சாதாரணமாகி வருகிறது. கால மாற்றத்தின் விளைவு என்ன என்பதற்காக மட்டுமே இதனை இந்த கோர்ட்டு தெரிவிக்கிறது. உணர்ச்சி ரீதியான ஈர்ப்புக்கும், உடல் ரீதியான உறவுக்கும் இடையில் உள்ள கோடு தெளிவற்றது.

எனவே இருவரின் தனிப்பட்ட பழக்கம் என்பது அன்பு நிறைந்ததா, திருமண எதிர்பார்ப்புடன் இருந்ததா, வெறும் இன்பத்துக்கானதா என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனை கோர்ட்டு உறுதிப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்துதல், ஏமாற்றுதல் மற்றும் இயலாமையின் காரணமாக உரிய நபர்கள் பாதிக்கப்படும்போது மட்டுமே சட்டம் தலையிடும்.

மேற்கண்ட இருவரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள். அவர்களுக்கு இடையே நடந்தது அவர்களின் தனிப்பட்ட விருப்ப நடவடிக்கை. எனவே ஒருவர், மற்றவர் மீது தார்மீக குற்றத்தை சுமத்த சட்டத்தை கருவியாக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. சமீப காலமாக இந்த வகையான புகார்கள் அதிகரிப்பதை இந்த கோர்ட்டு கவனத்தில் கொள்கிறது. அந்த வகையில் மனுதாரர் மீது வழக்கு தொடர்ந்தது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததற்கு சமம் என இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story