யாருடன் கூட்டணி வைக்கலாம்? - செய்தியாளரிடம் கேட்ட சீமான்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து சீமானிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்று செய்தியாளரிடமே சீமான் திருப்பிக்கேட்டார். அதற்கு , நமது மனதிற்கு ஏற்றவர்களோடு கூட்டணி வைக்கலாம் என செய்தியாளர் பதில் அளித்தார்.
இதையடுத்து பேசிய சீமான், எங்கள் மனதிற்கு ஏற்கவில்லை. அதுதான் பிரச்சினை. மதுவை ஒழிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். இந்த கட்சியும் மது ஆலை வைத்துள்ளது, அந்த கட்சியும் மது ஆலை வைத்துள்ளது.
ஊழல் , லஞ்சத்தை ஒழிக்க நினைக்கிறோம். எந்த கட்சியுடன் சேர்ந்து ஒழிக்கலாம். ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை எந்த கூட்டணியில் சேர்ந்து கொடுக்கலாம்?
ஆறு, ஏரி, மலை, மணல், காடு இவற்றை காப்பாற்ற நினைக்கிறோம். அள்ளி சாப்பிடும் நபர்களே அதிகாரத்தில் உள்ள நபர்களாக இருக்கிறார்கள். எந்த கூட்டணியுடன் சேர்ந்து நிற்கலாம்.
நேர்மைக்கும், உண்மைக்கும் இருபக்கமும் பஞ்சம். அதனால் நாங்கள் மக்களுடனே தஞ்சம். கூட்டணிக்கு நான் வரவில்லை' என்றார்.






