திருவண்ணாமலை பக்தர்களுக்கு மலையேற்றம் உண்டா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 21-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 7-ந் தேதி வரை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அறநிலையத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன், வேலூர் சரக டி.ஐ.ஜி. தர்மராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் தர்ப்பகராஜ் வரவேற்றார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமை தாங்கி அரசு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
மகா தீபத்தின்போது பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் விளக்கம் அளித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திருவண்ணாமலையில் மலைச்சரிவு இதுவரை ஏற்பட்டதில்லை. கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிவு ஏற்பட்டது.மலைச்சரிவுக்கு பின் ஐஐடி பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு மலையை ஆய்வு செய்தோம் ஆய்வில் மண்ணின் உறுதித்தன்மை குறைவிட்டதாகவும் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மேலே மேலே செல்ல அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்தனர்.திருவண்ணாமலையில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. தீபத்தின் போது மழை பெய்யுமா என தெரியாது தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என்றார்.






