மனித உயிர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களில் முதலிடத்தில் இதுவா..? வெளியான அதிர்ச்சி தகவல்

மனித உயிர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களில் இதுதான் முதலிடத்தில் உள்ளது. இதனால் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை இறக்கிறார்கள்.
சென்னை,
உலகில் மனிதராக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் அதுவே ஒரு உயிரினத்தால் இறப்பு ஏற்படுவது என்பது துரதிர்ஷ்டவசமானது. அப்படி உலகில் ஒவ்வொரு ஆண்டும் மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினங்களின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
‘கொசு'
அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ‘கொசு' என்பது எவ்வளவு ஆச்சரியமான தகவல். “கடுகு சிறிசுதான் என்றாலும் காரம் பெரிசு'' என்று சொல்வார்கள். அது இந்த கொசுவுக்கு மிகவும் பொருந்தும். தோற்றத்தில் கொசு சிறிய அளவில் இருந்தாலும், அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம், விளைவு மிக மிக அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்படிதான் இது ஆண்டுதோறும் பல உயிர்களை பலி கொள்கிறது. நேரடியாக கொசு கடிப்பதினால் யாரும் உயிரிழந்துவிடுவதில்லை. மாறாக கொசு கடிப்பதால் மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா மற்றும் என்செபாலிட்டிஸ் போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்தி அதன் மூலம் மரணத்தை கொடுக்கின்றன.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொசுக்கள் உலகில் சுமார் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான உயிர்களை காவு வாங்குகிறது. ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (யு.என்.எப்.பி.ஏ.) வெளியிட்ட 2024-ம் ஆண்டின் உலக மக்கள் தொகை குறித்த நிலை அறிக்கையில், இந்தியாவில் சராசரி மனிதர்களின் ஆயுட்காலம் 70 ஆண்டுகள் வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அப்படி 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய மனிதனின் வாழ்க்கையை சில நாட்கள், வாரங்கள் உயிர் வாழும் கொசு சீரழிக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்வோம். கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தாவிட்டால், இன்னும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.
நாய்கள், பாம்புகள்...
கொசுவுக்கு அடுத்தபடியாக, மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் 4.75 லட்சம் பேர் மனிதர்களால் மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக பாம்புகளினால் ஆண்டுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வரையிலும், நாய்களால் ஆண்டுக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையிலும், நன்னீர் நத்தைகளினால் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் முதல் சுமார் 2 லட்சம் வரையிலும், அசாசின் பூச்சிகளால் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் பேர் வரையிலும் கொல்லப்படுவதாக புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.






