கள்ளக்குறிச்சி: 1½ லட்சம் முட்டைகளுடன் சாலையில் கவிழ்ந்த லாரி


கள்ளக்குறிச்சி: 1½ லட்சம் முட்டைகளுடன் சாலையில் கவிழ்ந்த லாரி
x

சாலையில் கொட்டிய முட்டைகளை பொதுமக்கள் போட்டிப்போட்டு அள்ளியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

நாமக்கல்லில் இருந்து 1½ லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலையில் சென்னைக்கு புறப்பட்டது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த நடேசன் (வயது 38) என்பவர் ஓட்டினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காலை 5.30 மணிக்கு சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிக்கெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் நடேசன் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான லாரியில் இருந்த பெரும்பாலான முட்டைகள் உடைந்து சாலையில் வழிந்து ஓடியது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது லாரியில் இருந்த ஏராளமான முட்டைகள் பிளாஸ்டிக் அட்டைகளுடன் கீழே விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடையாத முட்டைகளை சேகரித்து அள்ளிச்சென்றனர். இது தவிர சிலர் உடைந்த முட்டைகளையும் பிளாஸ்டிக் பைகளில் சேகரித்து சென்றதையும் காணமுடிந்தது.

முட்டைகளை போட்டிப்போட்டு அள்ளியபோது பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார், அவர்களை விரட்டியடித்தனர். சேதமடைந்த முட்டைகளின் மொத்த மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story