கன்னியாகுமரியின் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ‘முந்திரிக்கொத்து’


கன்னியாகுமரியின் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ‘முந்திரிக்கொத்து’
x

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் குடிசைத் தொழிலாக முந்திரிக்கொத்து தயாரித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு பதார்த்தமாக முந்திரிக்கொத்து இருந்து வருகிறது. முன்பெல்லாம் முந்திரிக்கொத்து, முறுக்கு, அதிரசம் போன்றவற்றை தயாரிக்கும் பணியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஈடுபடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு, தனிக்குடித்தனம், பெரியோர்களின் உதவி கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் தீபாவளி பதார்த்தங்கள் வீடுகளில் தயாரிப்பதற்கு பதிலாக கடைகளில் விலைக்கு வாங்கப்படுகிறது. இதனால் முந்திரிக்கொத்து உள்ளிட்ட தீபாவளி பதார்த்தங்கள் தயார் செய்யும் தொழிலும் ஆண்டுக்காண்டு பெருகி வருகிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆண்கள், பெண்கள் குடிசைத் தொழிலாக இதனை செய்து வருகிறார்கள். எனவே தீபாவளி பண்டிகை காலம் மட்டுமின்றி சாதாரண காலங்களிலும் முந்திரிக் கொத்து இனிப்பு-காரம் விற்பனை செய்யும் கடைகள், பேக்கரி கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே முந்திரிக்கொத்து, முறுக்கு தயாரிப்பவர்களிடம் ஆர்டர் கொடுத்து, தீபாவளிக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வாங்கி பண்டிகையின்போது பரிமாறுகிறார்கள். இதேபோல் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு முந்திரிக்கொத்து, முறுக்கு தயாரிப்பவர்களிடம் ஆர்டர்கள் குவிந்துள்ளன.

முந்திரிக்கொத்து தயாரிக்கும் முறை

சிறுபயறை வறுத்து தோல் நீக்கி பொடியாக்க வேண்டும். அதனுடன் துருவிய தேங்காயை வறுத்து சேர்க்க வேண்டும். மேலும் ஏலக்காய், சுக்கு, எள் போன்றவற்றை பொடியாக்கி சேர்க்க வேண்டும். பின்னர் சிறுபயறு மாவுடன் சேர்க்கப்பட்ட கலவையை கருப்பட்டி பாகுடன் சேர்த்து கிளற வேண்டும். பின்னர் சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து காய வைக்க வேண்டும். அதன்பிறகு பச்சரிசி மாவில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது மஞ்சள் பொடி கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பசைபோன்று கரைத்து வைக்கப்பட்ட பச்சரிசி- மஞ்சள் பொடி கலந்த மாவில் ஏற்கனவே உருண்டை பிடித்து காய வைக்கப்பட்டு இருந்த உருண்டைகளை முக்கி, முக்கி எடுத்து எண்ணெய்யில் பொரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான, தித்திக்கும் முந்திரிக்கொத்து ரெடி.

பெயர் வந்தது எப்படி?

முந்திரிக் கொத்துக்கு தயாரிக்கப்படும் உருண்டைகளை எண்ணெய் சட்டியில் போட்டு பொரித்தெடுக்கும்போது அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும். அவ்வாறு ஒரே கொத்தில் குறைந்தது 5 முதல் 10 வரை இணைந்திருக்கும். இதைப்பார்க்கும்போது திராட்சைப்பழக் கொத்து போன்று காட்சி அளிக்கும். முந்திரி என்ற மலையாள வார்த்தை திராட்சை பழத்தை குறிப்பதாகும். அதைவைத்தே இந்த இனிப்பு பதார்த்தத்துக்கு முந்திரிக்கொத்து என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தீபாவளி பதார்த்தங்கள் தயாரித்து கொடுக்கும் ரெடிமேடு விற்பனையாளர்கள் முந்திரி கொத்துகளாக விற்பனை செய்வதில்லை. ஒவ்வொன்றாக பிரித்து எண்ணிக்கை அடிப்படையிலேயே விற்பனை செய்கிறார்கள்.

1 More update

Next Story