கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி; பலருக்கு தீவிர சிகிச்சை


கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி; பலருக்கு தீவிர சிகிச்சை
x

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண், 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.

கரூர்,

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இன்றிரவு நடந்தது. அப்போது, விஜய்யின் பிரசார பகுதியில் மின்தடை ஏற்பட்டது என தகவல் வெளியானது.

இந்நிலையில், கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய் பேசும்போது, மணல் கொள்ளை, மணல் குவாரி, கனிமவள கொள்ளை உள்ளிட்ட உள்ளூர் விசயங்களில் அதிக கவனம் செலுத்தி பேசினார். தொடர்ந்து அவர், 6 மாதங்களில் ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கை மாறும் என்றும் பேசினார்.

இந்த நிலையில், பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிலர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவர்களை நிர்வாகிகள் தூக்கி சென்றனர். அவர்களை மீட்பதற்காக ஆம்புலன்சுகள் வரிசையாக வந்தன. எனினும், கூட்ட நெரிசலால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு கரூர் போலீஸ் சூப்பிரெண்டு சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள், பெண்கள் என 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை பிரசார பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அவர்கள், சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கூட்ட நெரிசலால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலர் மயக்கம் அடைந்தனர். சிறுவர், சிறுமிகளை பெற்றோர் தூக்கி சென்றனர். குழந்தைகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். 5 குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் என தகவல் வெளியானது.

அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் சிறுவர்கள் சிலரும் காணாமல் போயுள்ளனர் என கூறப்படுகிறது.

இத் நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுபற்றி மாவட்ட கலெக்டரை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட் ஆசீர்வாதம் சம்பவ பகுதிக்கு செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண், 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரும் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டனர் என தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். உயிரிழந்தவர்களில் 7 பேர் பெரியவர்கள் என தகவல் தெரிவிக்கின்றது. சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறப்படுகிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

1 More update

Next Story