கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி புறப்பட்டார் விஜய்


தினத்தந்தி 12 Jan 2026 6:37 AM IST (Updated: 12 Jan 2026 7:46 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்.

புதுடெல்லி,

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டு சென்ற நிலையில், அந்த வாகனத்தை கரூருக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார்கள். பிரசார வாகன டிரைவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன.விசாரணை முடிந்தவுடன் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மண்யளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் விஜய் டெல்லி செல்கிறார்.

விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்களும், த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டு விட்டனர். இதனால் சி.பி.ஐ. அலுவலகம் முன் மற்றும் விஜய் வரும் பாதையில் பெரும் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்களிடம் டெல்லியில் சி.பி.ஐ. 3 நாள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோல விஜய்யிடமும் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

1 More update

Next Story