கரூர் துயர சம்பவம்: அழுதது ஏன்..? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குகளுக்கு சமமானது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கரூர் துயர சம்பவம்: அழுதது ஏன்..? - விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
Published on

மதுரை,

மதுரை உலக தமிழ் சங்கத்தில் `தமிழ் முழக்கம் மேடைப்பேச்சு மற்றும் ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி, பன்னாட்டு பயிலரங்க விழா' நேற்று தொடங்கியது. வருகிற 27-ந் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ்ச்சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா, தளபதி எம்.எல்.ஏ. மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், இந்த மேம்பாட்டு பயிற்சி மூலம் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கல்லூரி கல்வி இயக்ககத்தில் இருந்து பயிலரங்கத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் இலங்கை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் 13 மாணவர்கள் மற்றும் 4 விரிவுரையாளர்கள் பங்கேற்று உள்ளனர். நாட்டு நடப்பு மற்றும் சமூகம் சார்ந்து பேசுபவர்கள் இளம் பேச்சாளர்களாக உருவாகி உள்ளனர். அவர்கள் நட்சத்திர பேச்சாளர்களாக வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கமாகும் என்றார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மழை நீர் பள்ளி வளாகங்களில் தேங்கி இருந்தால் அதை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மின் கசிவு உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்தின் துயரத்தால் நான் அழுதேன். அது சம்பந்தமான வீடியோ காட்சியை விமர்சித்தவர்கள் குறித்து கேட்கிறீர்கள். உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும். இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குகளுக்கு சமமானது. அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார். முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக்க மறந்து விட்டான் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com