தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது - அண்ணாமலை பேச்சு

பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் உரையாற்றிய தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருட்டு ஆட்சியில் இருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் யாத்திரை நடைபெற்றுள்ளது. திமுகவை பற்றி ரோடு முதல் வீடு வரை திட்டுகிறார்கள். நான் சொல்வதற்கு இன்னும் என்ன இருக்கிறது? ஏதாவது செய்து திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் எல்லாரும் சொல்கின்றனர்.
2026-க்குப் பின் திமுக வேண்டாம் என்று மக்கள் சொல்வது யாத்திரையின் வெற்றியை பிரதிபலிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். 2026-ல் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீதியில் பெண்கள் நடமாட முடியவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை.
முதல்வரே பொய் சொல்லும் ஆட்சி இது. திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் சொல்கிறார். வாக்குறுதி நிறைவேற்றம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மாவட்ட வாரியாக கொடுத்த வாக்குறுதிகளை திமுக இணையதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர்.
தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் 4 ஆண்டு காலம் கடத்தியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகம் வரும் நிறுவனங்களிடம் கமிஷன் கேட்கிறார்கள். அதனால் வேறு மாநிலம் நோக்கி தொழில் நிறுவனங்கள் செல்கின்றன.
பொங்கல் பரிசாக ரூ.3 ஆயிரம் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்று எண்ணுகிறார்கள். ஒரு ரேஷன் அட்டை மீது ரூ.4.54 லட்சம் கடன் உள்ளது. 4 ஆண்டுகளில் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு ரூ.4.54 லட்சம் கடனை ஏற்றியுள்ளனர். இதனை நாம்தான் கட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






