கூட்டணி குறித்து பேசினால் பிரதமர் மீதும் வழக்கு: ராமதாஸ் வழக்கறிஞர்

டாக்டர் ராமதாஸ்
அன்புமணியிடம் பிரதமர் மோடியே கூட்டணி குறித்து பேசினாலும் அது தவறு என ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க.வின் நிறுவனராக டாக்டர் ராமதாஸ் இருந்து வருகிறார். கட்சியின் தலைவர் தான் என்றும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என்று கூறி வருகிறார். அதனால், கட்சியின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை, அன்புமணி பயன்படுத்த தடை விதிக்க கோரி, ராமதாஸ் தரப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இதுபற்றி, ராமதாஸ் தரப்பு சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் அருள் கூறும்போது, பா.ம.க.வுக்கு அன்புமணி தலைவர் கிடையாது. தலைவருக்கான அங்கீகாரம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என, டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதனால் பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால், ராமதாசிடம்தான் கூட்டணி தொடர்பாக பேச வேண்டும். பா.ம.க. பெயரை பயன்படுத்தி, அ.தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி அமைத்திருப்பது சட்ட விரோதம். பா.ம.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த, அன்புமணிக்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில், உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க. தொடர்பான எந்த கடித போக்குவரத்தும், அன்புமணி தரப்புடன் மேற்கொள்ள கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை மீறி, கூட்டணி அமைத்தால், அது தேசிய கட்சி தலைவராக இருந்தாலும், மாநில கட்சி தலைவராக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பா.ம.க.வில் தற்போது வரை ராமதாஸ் தான் தலைவர். அன்புமணியிடம் பிரதமர் மோடியே கூட்டணி குறித்து பேசினாலும் அது தவறு. அதனால், வருகிற 23-ந்தேதி கூட்டணி தொடர்பாக பேசினால், அன்புமணி மீதும் பிரதமர் மீதும் வழக்கு தொடர்வோம் என அவர் கூறினார்.






