“மலை நகரில் மாலை சந்திப்போம்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு


“மலை நகரில் மாலை சந்திப்போம்..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
x
தினத்தந்தி 14 Dec 2025 11:04 AM IST (Updated: 14 Dec 2025 1:24 PM IST)
t-max-icont-min-icon

இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

சென்னை,

திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில், “வணக்கம், நன்றாக இருக்கிறீர்களா? ஞாற்றுக்கிழமை (இன்று) திருவண்ணாமலை மாவட்டத்தில் இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கப்போகிறது என்று தலைமைக்கழகம் அறிவித்தது, உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனாலும் கழகத்தின் தலைமைத் தொண்டன் என்ற முறையில் உங்களை முறையாக அழைக்கத்தான் நான் பேசுகிறேன். நம்ம எல்லாரையும் உடன்பிறப்பு என்று அழைக்க என்ன காரணம் தெரியுமா? எல்லா குடும்பத்திலேயும் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கச்சி என்று இருப்பார்கள். அதேபோல நம்ம கழகத்திலேயும் எல்லாரும் அதே பாச உணர்வுடன் பழகனும் என்று உறவு கொண்டாடுகிறோம்.

அப்படிப்பட்ட நம்ம கழகத்தோட இளைஞரணி செயலாளராக இருக்கிற தம்பி உதயநிதி, உங்கள் எல்லோரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்று பாசறைப் பக்கம் தொடங்கி, சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவு திருவிழா வரைக்கும் ஏராளமான முன்னெடுப்புக்களை செய்து வருகிறார் களப்பணி செய்ய நிர்வாகிகளை நியமித்து, அந்த பெயர் பட்டியலை என்னிடம் காண்பித்தார். அதைப் பார்த்தப்போது, 45 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1980-ல் இளைஞரணி தொடங்கியபோது, எப்படி பெருமையாக இருந்ததோ, அதேபோல் இப்போது பெருமையாக இருந்தது.

பொறுப்புக்கு வந்திருக்கும் இளைஞர்கள், திராவிடம் என்ற மக்களுக்கான மாபெரும் ‘ஐடியாலஜி’யை பற்றி நீங்கள் பேசப்போகிறீர்கள். திராவிடம் என்ற மாபெரும் மக்கள் ‘ஐடியாலஜி’யை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போக போகிறீர்கள். தமிழ்நாட்டோட உரிமைகளுக்காக, உயர்வுக்காக போராடுகிற வரலாற்றுக் கடமை உங்களுக்கு இருக்கு. இந்தியாவிலேயே இன்று தமிழ்நாடு தனி தன்மையோட இருக்கு. அதன் தொடர்ச்சியாக நீங்கள் வரப்போகிறீர்கள் என்பதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.

சென்னையில் அறிவு திருவிழா நடந்தபோது, தலைநகரில் மட்டும் இப்படி நிகழ்ச்சி நடத்துகிறார்களே? மற்ற பகுதியிலும் நடந்தால் நன்றாக இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின், இந்த தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்து வடக்கு மண்டலத்தில இருக்குற 29 கழக மாவட்டங்கள், 91 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து கிளை, வார்டு என 1 லட்சத்து 30 ஆயிரம் இளைஞர்கள் வருகிறார்கள் என்று சொன்னதும், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சந்திப்போம். நியூ திராவிடன் ஸ்டாக், உங்களை வரவேற்கிறேன்” என்று அவர் பேசி இருந்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் தற்போது திருவண்ணாமலை தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு தொடர்பான வீடியோ ஒன்றை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான பதிவில், “மலை நகரில் மாலை சந்திப்போம்!.. இளைய திராவிட சொந்தங்களே..! மகிமைக்குத் தயாராகுங்கள்!” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story