காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயமாகவில்லை - இணை ஆணையர் விளக்கம்

பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்தது குறித்து காஞ்சீபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வெள்ளியால் ஆன சிறிய பல்லி சிலையும், தங்கப்பல்லி என்று அழைக்கப்படும் பித்தளையால் ஆன பெரிய சிலையும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த பல்லி சிலைகளை வணங்கி விட்டு செல்வது வழக்கம். வயதான பக்தர்களால் உயரமாக அமைக்கப்பட்டிருந்த பல்லி சிலைகளை தொட்டு வணங்குவது சிரமமாக இருந்தது.
பக்தர்களின் நலன் கருதி இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டு புனரமைப்பு செய்யும் பணி எல்.அண்ட் டி நிறுவனத்தின் மூலம் ரூ.76 லட்சத்து 90 ஆயிரம் செலவில் தொடங்கப்பட இருந்தது. இந்த பணிகளுக்கு தடைக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கோவிலில் தங்கப்பல்லி மாயமானதாகவும், தங்கம், வெள்ளியால் ஆன பல்லி சிலைகளை கோவில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பதாகவும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 5-ந்தேதி கோவில் உதவி ஆணையரும் நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமியிடம் விசாரித்தனர்.
அனைத்து பணிகளும் துறையின் அனுமதி பெற்றே நடக்கிறது என்று அவர் தெரிவித்தார். காஞ்சீபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரால் ஆய்வு செய்ததிலும் கோவில் நகைகள் வைக்கும் அறையிலேயே பல்லி சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி ரங்கராஜ நரசிம்மன் தெரிவித்த பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.






