மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

வாக்குப்பதிவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன
மும்பை,
மராட்டியத்தில் மும்பை, தானே, நவிமும்பை, புனே, நாக்பூர் உள்பட 29 மாநகராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து மாநகராட்சிகளுக்கும் ஜனவரி 15-ந் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் கமிஷன் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தேர்தல் பணிகள் தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றது. 29 மாநகராட்சிகளிலும் இன்று (வியாழக்கிமை) வாக்குப்பதிவு காலை 7.30 மணிக்கு தொடங்கியது.
இடைவிடாமல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தல் மூலம் 29 மாநகராட்சிகளிலும் 2 ஆயிரத்து 869 கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க 15 ஆயிரத்து 931 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களை தேர்ந்தெடுக்க 3 கோடியே 48 லட்சம் வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர். வாக்குப்பதிவையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதற்கிடையே 29 மாநகராட்சிகளிலும் வாக்கு எண்ணிக்கை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. உடனடியாக தேர்தல் முடிவு வெளியாக இருப்பது வாக்காளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.






