ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு

நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 14.000 கன அடியாக இருந்தது.
தருமபுரி,
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், கனகபுரா, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, ராசி மணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14.000 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 8,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்துள்ளதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து குறைந்து உள்ளது.
மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.






