வானை வண்ணமாக்கிய “சிவப்பு சந்திரன்” - நாடு முழுவதும் கண்டு ரசித்த மக்கள்
இந்தியாவில் இயற்கை வானியல் நிகழ்வான முழு ‘சந்திர கிரகணம்’ தற்பொழுது நடைபெற்று வருகிறது.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது ‘சூரிய கிரகணம்' எனவும், பூமியின் நிழல் நிலவை மறைத்தால் அது ‘சந்திர கிரகணம்' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் தென்பட்டது.
தொடர்ந்து முழு சந்திர கிரகணம் நேற்று இரவு வானில் அபூர்வ நிகழ்வாக காணப்பட்டது. பூமியின் நிழலில் கடந்து செல்லும்போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. இது ‘பிளட் மூன்' அல்லது ‘ரத்த நிலா’ என்று வானியல் விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்பட்டதால் இது ஏற்பட்டுள்ளது.
இந்த அரிய வானியல் நிகழ்வை தொலைநோக்கி வழியாக பொதுமக்கள் பார்வையிட சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணி முதல் கிரகணம் விடும் நள்ளிரவு வரை நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் விஞ்ஞானிகள் ரத்த நிலவை கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கினர். அது குறித்து விளக்கமும் அளித்தனர்.
இதனை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், இந்திய பெருங்கடல், ஆர்க்டிக், அண்டார்டிகா ஆகிய பகுதிகளிலும் பலர் பார்த்தனர். இந்தியாவில் சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் தெளிவாக பார்க்க முடிந்தது. இந்த முழு கிரகணத்தை வானம் தெளிவாக இருந்ததால் வெறும் கண்களாலேயே பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்த பிர்லா கோளரங்க முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி சவுந்தரராஜ பெருமாள் கூறும்போது, ‘வானில் ஓர் அரிய நிகழ்வாக இது நடந்தது. நிலவு கிழக்கு நோக்கி நகர்ந்தபோது, இரவு 9.57 மணிக்கு நிலவின் கிழக்கு பகுதியில் முதலில் பகுதிநேர சந்திரகிரகணமாக பிடிக்க ஆரம்பித்து, இரவு 11 மணிக்கு நிலவு முழுவதையும் கிரகணம் பிடித்தது. இது நள்ளிரவு 12.22 மணிக்கு முடிவடைந்தது. அப்போது நிலவு அடர்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்தது. அதற்கு பிறகு 1.26 மணி வரை பகுதி சந்திரகிரகணமாக நிலவு காட்சியளித்தது. சிவப்பு நிறத்தில் நிலவு காட்சியளித்ததை, நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு மெய்சிலிர்த்தனர். வெறும் கண்ணாலும் இதனை பலர் பார்வையிட்டனர்.
உலகில் வடஅமெரிக்கா, தென்அமெரிக்காவை தவிர்த்து உலகம் முழுவதும் சுமார் 650 கோடி பேர் இந்த வானியல் அரிய நிகழ்வை பார்வையிட்டனர். இத்தகைய அரிய வானியல் நிகழ்வை கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி பார்வையிட்டோம். அதற்கு பிறகு தற்போது நிகழ்ந்துள்ளது. அடுத்து வருகிற 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி தான் நடைபெறும்' என்றார்.
இதுகுறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் சண்முக சுந்தரம் கூறும்போது, ‘அரிய வானியல் நிகழ்வான சந்திர கிரகணத்தை காண்பதற்காக கோளரங்க வளாகத்தில் 6 தொலைநோக்கிகள் (டெலஸ்கோப்) அமைத்திருந்தோம். கிரகணம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நள்ளிரவு வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். பார்வையாளர்களுக்காக அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு இருந்தது' என்றார்.













