பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள்; விசாரணைக்கு உத்தரவு

கொலையாளி, பயங்கரவாதி, கடத்தல்காரர் உள்ளிட்ட கைதிகளுக்கு செல்போன்கள், டி.வி.யுடன் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில் பரப்பனஅக்ரஹாரா சிறை உள்ளது. இங்கு 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். ரேணுகாசாமி கொலை வழக்கில் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சொகுசு வசதி பெற்றதுடன், செல்போனில் பேசியதும், நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்தபடியே டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
பரப்பனஅக்ரஹாரா சிறையில் கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியான உமேஷ் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20 கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அவற்றில் 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து, அவர்களை கொலை செய்ததும் அடங்கும். இந்த வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.
அவர் சிறைக்குள் செல்போனில் பேசியபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிகிறார். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. இருப்பதும் தெரியவந்துள்ளது. உமேஷ் ரெட்டி இரண்டு விதமான செல்போன்களில் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அவர் இரண்டு செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் காதலன் தருணும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் செல்போனில் பேசியபடி சிறையில் சுற்றித் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாரோ ஒருவருடன் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஜூகாத் கமீத் ஷகீலும் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூகாத் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றி வருவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து பா.ஜனதா தலைவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுபற்றி நேற்று காலை முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. அதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார். அதே நேரத்தில், போலீஸ் மந்திரி பரமேஸ்வர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த், மேற்கண்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் கைதிகள் எப்படி செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜாமரால் தங்களுக்கே பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.






