பராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

பராமரிப்பு பணி காரணமாக திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி மற்றும் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்காரணமாக திருச்சியில் இருந்தும், திருச்சி வழியாகவும் செல்லும் சில ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, திருச்சியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (எண்:56700) வருகிற 5-ந்தேதி, 7-ந்தேதி, 12-ந்தேதி ஆகிய 3 நாட்களும் மயிலாடுதுறைக்கு செல்லாது. கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும். அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து பகல் 12.10 மணிக்கு புறப்படும் செங்கோட்டை விரைவு ரெயில் (எண்:16847) வருகிற 5-ந்தேதி, 7-ந்தேதி, 12-ந்தேதி ஆகிய 3 நாட்களும் மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. அதற்கு பதிலாக கும்பகோணத்தில் இருந்து பகல் 12.42 மணிக்கு செங்கோட்டைக்கு புறப்படும்.
சோழன் அதிவேக விரைவுரெயில்
திருச்சி-சென்னை சோழன் அதிவேக விரைவு ரெயில் (எண்:22676) வருகிற 5-ந்தேதி, 7-ந்தேதி, 12-ந்தேதி ஆகிய 3 நாட்கள் 10 நிமிடங்களும், லோக்மானியதிலக்-மதுரை அதிவேக விரைவு ரெயில் (எண்:22101), ஹம்சபர் அதிவேக விரைவு ரெயில் (எண்:20481) ஆகியவை வருகிற 7-ந்தேதி 30 நிமிடங்களும், கச்சிக்குடா-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்:07435) வருகிற 9-ந்தேதி 40 நிமிடங்களும் தாமதமாக இயக்கப்படும்.
சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ்
இதுபோல் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்:16127) வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 15 நிமிடங்கள் தாமதமாகவும், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (எண்:16128) வருகிற 6-ந்தேதி, 20-ந்தேதி மற்றும் 27-ந்தேதி ஆகிய 3 நாட்கள் 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.
ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில்
இதுபோல் ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் (எண்:56106) வருகிற 6-ந்தேதி, 8-ந்தேதி ஆகிய நாட்களிலும், பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) வருகிற 6-ந்தேதி, 8-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய நாட்களிலும் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில்கள் திருச்சிக்கு வராது.
திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ்
திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) வருகிற 6-ந்தேதி, 8-ந்தேதி, 10-ந்தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து பாலக்காடு புறப்படாது. மாறாக கரூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு பாலக்காடு புறப்படும். மேலும் பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 9-ந்தேதி வரை கோவை சந்திப்பு, வடகோவை, பீளமேடு வழியாக செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூர் சந்திப்பில் இருந்து இருங்கூர் வழியாக இயக்கப்படும்.
இந்த தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.






