கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி வைபவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்


கும்பகோணம் மகாமக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி வைபவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 March 2025 1:21 PM IST (Updated: 12 March 2025 1:48 PM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக பெருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். அதே போல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாசிமக பெருவிழாவும் சிறப்பு பெற்றதாகும். மாசிமக நாளன்று மகாமக குளத்தின் கரையில் சிவன்கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கும்பகோணம் பகுதிகளில் உள்ள காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடந்து வந்தது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மக தீர்த்தவாரி இன்று பிற்பகல் மகாமக திருக்குளத்தில் நடைபெற்றது. 10 சிவாலய பஞ்ச மூர்த்திகள் மகாமக குளத்தை சுற்றி வலம் வந்து அருள்பாலித்தனர்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மக திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலையிலிருந்து ஏராளமானோர் மகாமக குளத்தில் புனித நீராடி வருகின்றனர். மேலும் தங்களது முன்னோர்கள் ஆன்மா அமைதி பெற வேண்டி வழிபாடும் நடத்தி வருகின்றனர். இந்தநாளில் கும்பகோணம் மகாமக திருக்குளத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

1 More update

Next Story