மெட்ரோ திட்ட அறிக்கையை நிராகரித்த விவகாரம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்


மெட்ரோ திட்ட அறிக்கையை நிராகரித்த விவகாரம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
x

கோவை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை நிராகரித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டபோது, அதிமுக மற்றும் திமுக கூட்டணி கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

மேயர் ரங்கநாயகி தலைமையில் கூட்டம் தொடங்கியதும், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டன. "கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை மாநகராட்சி மாமன்றம் கடுமையாக எதிர்க்கிறது," என கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் முழக்கமிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

மெட்ரோ திட்ட நிராகரிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "திமுக அரசு தாக்கல் செய்த தவறான தரவுகளின் காரணமாகவே மத்திய அரசு இந்த திட்டத்தை நிராகரித்தது," என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

அப்போது மாநில அரசுக்கு எதிராக அதிமுக கவுன்சிலர்கள் கண்டனப் பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். திமுக கூட்டணி கவுன்சிலர்கள் அந்தப் பதாகைகளைக் கிழித்தெறிந்தனர். இரு தரப்பு கவுன்சிலர்களும் ஒருவருக்கொருவர் பதாகைகளைப் பறித்துக் கொண்டும், கடும் வாக்குவாதத்திலும், முழக்கங்களிலும் ஈடுபட்டதால், மாமன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் ஏற்பட்ட இந்த குழப்பங்களுக்கு மத்தியில், அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் என்பவரை இரண்டு மாதங்களுக்கு மாமன்ற கூட்டத்தில் பங்கேற்க தடை (சஸ்பென்ட்) விதித்து மேயர் ரங்கநாயகி அறிவித்தார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியிலும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்தும், அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் உடனடியாக மாமன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

1 More update

Next Story