

சென்னை ,
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்ககான மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான திட்ட விரிவாக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கையைக் கேட்டு அதனைத் திருப்பியனுப்பியிருக்கிறது.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,
மதுரையும், கோவையும் தமிழ்நாட்டின் பெருமைமிகு நகரங்கள். இவை இரண்டும் இந்தியாவின் வேகமாக வளரும் Tier-II நகரங்களில் முக்கியமானவை. இந்நகரங்களுக்கு மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல; அவசியமான உள்கட்டமைப்புத் தேவை. மக்கள் நெருக்கடியைக் குறைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, என அனைத்துக்கும் மெட்ரோ இன்றியமையாதது.
ஒன்றிய பாஜக அரசின் பாகுபாட்டை எதிர்த்து, தமிழ்நாடு மக்களின் நியாயமான உரிமைக்காகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை வழங்கக் கோரி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய குரலுக்கு முழு ஆதரவு தெரிவிப்போம் எனக் கூறியுள்ளார்.