வீட்டுக்குள் புகுந்த மிளா: பிடிக்க முயன்ற வனத்துறையினர் 3 பேர் காயம்

பொதுமக்கள் திரண்டதால் மிளா வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம். இவரது வீட்டிற்குள் நேற்று அதிகாலையில் இப்ராகிமின் மனைவி வழக்கம்போல் சமையல் அறைக்கு சென்றார். அப்போது, அங்கு ஒரு விலங்கு நிற்பதை கண்டார்.
அதிகாலை என்பதால், இப்ராகிமின் மனைவி அது பசு மாடு என நினைத்து அதனை விரட்டுவதற்காக அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்தார். அவர்கள் வந்து பார்த்தபோது தான், வீட்டிற்குள் நிற்பது மிளா என்பது தெரியவந்தது. அதைக்கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் திரண்டதால் மிளா வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
மேலும், அந்த அறைக்குள் அங்குமிங்கும் ஓடியதில் அங்கிருந்த பொருட்கள் சிதறின. இதுபற்றி அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, மிளாவை பிடிக்க முயன்றனர். அப்போது, மிளா காலால் தாக்கியதில் வனத்துறை ஊழியர்கள் 3 பேர் காயமடைந்தனர். பின்னர், 1 மணிநேரம் போராடி வலையை போட்டு மிளாவை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.






