சிறுபான்மையின கைவினை கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சிறுபான்மையின கைவினை கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
Published on

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) கீழ் விராசாத் கைவினைக் கலைஞர் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தையல் தொழில், பாய்முடைதல், கூடை பின்னுதல், தறி நெய்தல், ஆரி ஓர்க், எம்பிராய்டரி கைவினைப் பொருட்கள் செய்தல், மரச்சாமான்கள் செய்தல் மற்றும் இதர கைவினைத் தொழில்கள் மேற்கொள்ளும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

திட்டம்-1-ன் கீழ் பயன்பெற விரும்பும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும்.

திட்டம்-2-ன் கீழ் பயன்பெற நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினக் கைவினைக் கலைஞர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் ஆண் பயனாளிகளுக்கு 6 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்சொன்ன திட்டம்-1 மற்றும் திட்டம்-2-ன் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் போன்ற விராசாத் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் மேற்சொன்ன கைவினைக் கலைஞர் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் விண்ணப்பங்களை https://tamco.tn.gov.in/ என்ற இணையதள முகவரி அல்லது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்று கொள்ளலாம். மேற்சொன்ன திட்டத்தின் கீழ் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com