பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள் என்று முதல்-அமைச்சர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருந்தார்.
பெற்றோரை இழந்துவாடும் நான்கு குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.12.2025) தலைமைச் செயலகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு. பணிநியமன ஆணை, அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி, திறன் பயிற்சிக்கான உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் 14.11.2025 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி வசந்தியும் 2017-ஆம் ஆண்டே உடல்நலக் குறைவால் காலமானார். இத்தம்பதியருக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைள் உள்ளனர்.

பெற்றோரை இழந்து தவிக்கும் நான்கு குழந்தைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார். இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் என்று முதல்-அமைச்சர் தனது சமூகவலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்றையதினம் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மறைந்த கமலக்கண்ணனின் மகள் லாவண்யாவிற்கு ரூ.2,50,000/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,55,600/- மதிப்பீட்டில் வீடு கட்டுதவற்கு ஒதுக்கீடு ஆணை, சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினையும், மகள் ரிஷிகா மற்றும் மகன் அப்னேஷ் ஆகியோருக்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் மாதம் தலா ரூ.2000/- நிதி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், மகள் ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6,000/- உதவித்தொகை ஆகியவற்றை வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com