தமிழக அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் முக்கியமான நாளாக முருக பக்தர்கள் மாநாடு இருக்கும் - எல்.முருகன்

கோப்புப்படம்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் இந்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2015-ம் ஆண்டு பிரதமர் மோடி எடுத்த முயற்சியின் காரணத்தினால் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு தற்போது 11-ம் ஆண்டாக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. விசாகப்பட்டினத்தில் 28 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா செய்து கின்னஸ் சாதனை புரிந்து உள்ளனர். இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டுள்ளார்.
யோகா கலையை நம் வருங்கால சந்ததியினருக்கும் எடுத்து செல்ல வேண்டும். நாளை மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. பல லட்சம் முருக பக்தர்கள் அங்கு வர உள்ளனர். தமிழக அரசியல் மற்றும் ஆன்மிகத்தில் முக்கியமான நாளாக முருக பக்தர்கள் மாநாடு இருக்கும். கோவில்கள், சட்டம்- ஒழுங்கு போன்றவை மாநில அரசின் கீழ் உள்ளது. பல கோவில்கள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சட்டம்- ஒழுங்கை முறைப்படுத்துவது மாநில அரசின் கடமை.
மாநில அரசு கோவில்களில் பக்தர்களுக்கு முறையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டினுடைய முக்கிய சாராம்சமே கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான். கோவில்களில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகளை செய்து தரமுடியவில்லை என்றால் கோவிலை விட்டு வெளியேறுங்கள் என்று மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக இருக்கின்றனர். தி.மு.க. மீது மக்கள் மிக பெரிய அதிருப்தியில் உள்ளனர். அந்த அதிருப்தி நம் மீதும் வரக்கூடாது என்று கூட்டணி கட்சியினரும் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. துப்பாக்கி, அரிவாள் கலாசாரத்தை தாண்டி கஞ்சா, போதை பொருட்கள் கலாசாரம் ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் புகுந்துள்ளது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவலை கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






