நீலகிரி: மின்வாரிய குடியிருப்புக்குள் கரடி புகுந்து அட்டகாசம்

அவலாஞ்சியில் மின்வாரிய குடியிருப்புக்குள் கரடி புகுந்து வீட்டின் கதவு, ஜன்னலை தட்டி அட்டகாசம் செய்தது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த அவலாஞ்சி சுற்றுவட்டார பகுதியை சுற்றிலும் இருமாநிலத்திற்கு சொந்தமான அடர்ந்த வனங்கள் உள்ளன. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இங்கு விலை உயர்ந்த மரங்களும், நெல்லிக்காய், கடுக்காய் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட மரங்களும், அதிகமாக உள்ளன.
அவலாஞ்சி அணையை ஒட்டி மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் இன்று மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கு கரடி ஒன்று வந்தது. அங்குமிங்கும் நோட்டமிட்ட கரடி அங்கிருந்த ஒரு வீட்டின் கதவைத் தட்டி உள்ளது. வீட்டுக்குள் இருந்த பெண்கள் கதவை திறந்து பார்த்தபோது கரடி இருந்ததால் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கதவை பூட்டி விட்டனர். அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதன் பின்னர் கரடி அந்த பக்கம் சென்று மற்றொரு வீட்டின் ஜன்னலை தட்டியது. சிறிது நேரத்தில் அங்கு மற்றொரு கரடியும் வந்தது. பின்னர் ஒரு வழியாக அந்த கரடிகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் புகுவதை வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கரடிகள் குடியிருப்புக்குள் வந்து சுற்றிதிரிந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






