நீலகிரி: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்த நிகழ்வு கந்த சஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது. தீமையை ஒழித்து தர்மத்தை நிலைநாட்டிய நிகழ்வாக கருதப்படுகிறது. இது முருக வழிபாட்டில் உச்சபட்ச வழிபாடாக உள்ளது. ஐப்பசி மாதத்தில், தீபாவளிக்குப் பிறகு வரும் அமாவாசை பிரதமை தொடங்கி சஷ்டி வரை நடைபெறும் 6 நாட்கள் தான் கந்த சஷ்டி விரத நாட்கள் ஆகும். கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாள் சூரசம்ஹாரம் நடைபெறும்.
இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் கடந்த 22 ஆம் தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பூஜைகள் முடிந்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்தார்.
கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளான இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஊட்டி அடுத்த மஞ்சூர் அண்ணமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (புதன்கிழமை) விடையாற்றி உற்சவம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா முடிகிறது. சூரசம்ஹார நிகழ்விற்காக முருக பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக கந்த சஷ்டி விரதம் இருந்து நேற்று நிறைவு செய்தனர்.






