அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது: செல்லூர் ராஜு

கூட்டணிக்கான முடிவுகளை எடப்பாடி பழனிசாமிதான் எடுப்பார் என்று செல்லூர் ராஜு கூறினார்.
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தேவர் குருபூஜையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மரியாதை செலுத்துகிறார். முன்னதாக மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறார். தமிழக வெற்றிக்கழகம் புதுக்கட்சி. அவர்களின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் விமர்சனம் செய்ய முடியாது. தவெக நிர்வாகிகள் எடுக்கக்கூடிய முடிவுக்கு நாங்கள் கருத்து சொல்வது சரியல்ல.
திமுகவானது, தவெகவை வளர விடாது என்பதால் திமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் பணியை சரியாக செய்கிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவரை விமர்சனம் செய்கிறார். திமுகவுக்கு டெல்டா மாவட்ட மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதிமுகவை யாரும் அடிமைப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அரசியல் அடையாளத்துக்காக டி.டி.வி.தினகரன் பேசும் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. கூட்டணிக்கான முடிவுகளை எடப்பாடி பழனிசாமிதான் எடுப்பார். திருமாவளவனால் தன் கட்சித்தலைவர்களை ஒருமுகப்படுத்த முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






