தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்


தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை - சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
x

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது

சென்னை

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதனிடையே, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள்,ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்வரை அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி இல்லை என்று மதுரை கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெரிமுறைகள் வகுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது, கட்சி கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் தங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தவெக தரப்பில் வாதிடப்பட்டது. சில கட்சிகளுக்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை என தவெக வாதிட்டது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என வாதிட்டார். வழக்கு விசாரணை ஐகோட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story