அன்புமணியுடன் எந்த அரசியல் கட்சியும் பா.ம.க. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது: டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. சார்பாக அன்புமணியுடன் கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சிக்கு மருத்துவர் அய்யா மட்டுமே நிறுவன தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகிறார். 17.12.2025 முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடனோ அல்லது வேறு எவரிடமோ எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இயலாது. மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர்.
இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி மருத்துவர் அய்யா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர் என்று கூறப்பட்டு உள்ளது.






