தைப்பிறந்தால் 'வழி' பிறக்கும் என்றார், ஓ.பன்னீர்செல்வம்: கடைசியில் 'வலி' தான்..?

2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது.
சென்னை,
அ.தி.மு.க.வில் எப்படி எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னால் உட்கட்சி பூசல் ஏற்பட்டதோ, அதேபோல் ஜெயலலிதா மறைவுக்கு பின்னாலும் அதே நிலையே ஏற்பட்டது. ஜெயலலிதாவின் உயிர் தோழியான சசிகலா, முதல்-அமைச்சராக பதவி ஏற்க இருந்த நேரத்தில், சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, கட்சியை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும் வழி நடத்தினார்கள். கூடுதலாக, துணை முதல்-அமைச்சர் பதவியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், உட்கட்சி பூசல் இலைமறை காயாக தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
இந்த நிலையில், 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் போட்டிபோட்டாலும் இறுதியில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்தது.
அதன்பிறகு, பிரச்சினை பூதாகரமாகவே அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் மற்றும் ஒருசில முன்னாள் உறுப்பினர்கள் வெளியேறினார்கள்.
தற்போது, சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் அவருடைய முடிவுக்காக காத்திருந்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுப்பதில் தடுமாற்றத்தில் இருப்பதால், ஒவ்வொருவராக வெளியேற தொடங்கி விட்டார்கள்.
ஏற்கனவே, ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்துவிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து விட்டார். இப்போது, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கமும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்துவிட்டார்.
இன்னும் எம்.எல்.ஏ. அய்யப்பன் மட்டும்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ளார். அடுத்ததாக, ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், குன்னம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய தயாராகி விட்டனர்.
இப்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவதால், அவருடைய பலமும், செல்வாக்கும் குறைந்து வருகிறது. "தைப்பிறந்தால் 'வழி' பிறக்கும்" என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் கூறிவந்தார். ஆனால், கடைசியில் அவருக்கு 'வலி' தான் பிறந்திருக்கிறது என்று, அவரை பிரிந்து சென்ற ஆதரவாளர்களே கூறிவருகின்றனர்.






