விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

கோப்புப்படம்
குழந்தை வாளி தண்ணீரில் தவறி விழுந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை.
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (35 வயது). இவர், சேரன்மாதேவி சரகத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும், ஒன்றரை வயதில் பிரேம்குமார் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
நேற்று வழக்கம் போல் ரவிக்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் குழந்தை பிரேம்குமார் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை அந்த வாளி தண்ணீரில் தவறி விழுந்ததாகவும், இதை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
தண்ணீரில் விழுந்ததில் மூச்சுத்திணறிய குழந்தை பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. வாளி தண்ணீரில் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சேரன்மாதேவி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






