8 மணல் குவாரிகள் திறப்பு: சுற்றுச்சூழல் துறை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

இந்த எட்டு மணல் குவாரிகள் திறப்பால் கட்டாயம் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடிநீர்பாதிப்பு ஏற்படும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி கடலூர் மாவட்டத்தில் இரண்டு இடத்திலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று இடத்திலும், தஞ்சை, ராணிப்பேட்டை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் 8 மணல் குவாரிகளை நீர்வளத்துறை திறக்க இருப்பதாகவும் அதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டு கனிம வளத்துறை வரையறை ஒப்புதல் மூலம் அந்த மணல் குவாரிகளில் மணலை எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. அந்த மணல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட நான்கு மடங்கு அதிக அளவிற்கு மணல் வெட்டி அள்ளப்பட்டதாக புகார் வந்தன. 12 மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினரின் கள ஆய்விலும் அது தெளிவாக தெரியவந்தது. மணல் குவாரிகளில் எடுக்கப்பட்ட மணலானது பல ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கப்பட வேண்டிய மணலின் அளவைவிட பன்மடங்கு அதிக அளவு மணலை குறுகிய காலத்திலேயே கனிமவளத்துறை, நீர்வளத்துறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட அதிக அளவு வெட்டி எடுத்து விட்டனர்.
தற்போது அனுமதிக்க பட்ட 8 மணல் குவாரிகளில் மணல் எடுப்பதால் மணல் குவாரிகள் அமைய உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும். தற்போது பெய்து வருகின்ற பருவமழையில் அந்தப் பகுதியில் போதிய நீரை கொண்டு விவசாயிகள் நல்ல நிலையில் விவசாயம் செய்து உள்ளனர். ஆனால் மணல் குவாரி திறக்க படும் பட்சத்தில் ஆற்றில் மணல் எடுப்பதால் நீர்மட்டம் கட்டாயமாக குறையும். விவசாயம் பாதிக்கப்படும்.
ஆற்றில் உள்ள மணல் ஒரு கடல்பாசி போல் செயல்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை ஈடுசெய்ய உதவுகிறது. அதிக அளவு மணல் எடுப்பதால் அருகில் உள்ள விவசாய ஆழ்துளைகிணறுகள் மற்றும் கிணறுகளிலும், நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயத்திற்கும், குடிதண்ணீருக்கும் நீர் தட்டுப்பாடு கட்டாயம் வறட்சி காலங்களில் ஏற்படும். மணல் எடுக்கப்படும் ஆற்று பகுதிகளில் மழைக்காலங்களில் அதிகப்படியான அரிப்பும் ஏற்படும். வண்டல்களும் அதிகரிக்கபடும், ஆற்றின் கறைகள் அரிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
ஆறுகளில் படிந்திருக்கும் மணல் பல்லாயிரம் ஆண்டுகள் இயற்கை செயல்பாட்டின் விளைவு. இந்த மணலில் தாது பொருட்கள் இருக்கும். அவை தான் வண்டலாகவும் படியும். இந்த வண்டல் தான் தாவரங்கள் வளர தேவையான சத்துக்களை தருகிறது. இவை தாண்டி ஆற்றில் நீர் முழுமையாக ஆவி ஆகாமல் காப்பதும் ஆற்று மணல் தான். இந்த மணல் தான் ஆறு வற்றிய காலங்களிலும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொள்ளும். அத்தகைய மணலை அள்ளி எடுத்துவிட்டால் மழைக்காலங்களில் வெள்ளமும், கோடை காலத்தில் கடும் வறட்சியும் நிலவுவது தடுக்க முடியாது. இப்படி வெட்டி எடுக்கப்படுகின்ற மணலை ஆற்றில் இயற்கையாக புதுப்பிக்க பல நூறு ஆண்டுகள் ஆகும் ஆகவே தமிழகத்தில் தற்போது திறக்க திட்டமிட்டுள்ள எட்டு மணல் குவாரிகளின் அனுமதியை சுற்றுச்சூழல் துறை உடனே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி சுற்றுச்சூழலை மனதில் கொண்டு தொடர்ந்து கனிமவளத்துறை கொள்ளைகளுக்கும், மாசுக்கும் எதிராக போராடி வருகிறது. கட்டுமான பணிகளுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மணலுக்கு மாற்றான வேதிப்பொருட்களை கொண்டு கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கான வழிகளை அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதியதாக திறக்க உள்ள இந்த எட்டு மணல் குவாரிகள் திறப்பால் கட்டாயம் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடிநீர் பாதிப்பு ஏற்படும். இவற்றை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு மணல் குவாரி திறப்பை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






