நம்ம ஊரு மோடி பொங்கல்; ஜனவரி 4 முதல் கொண்டாட பாஜக ஏற்பாடு

மண்டல் தலைவர்கள் முழு பொறுப்பு எடுத்து இந்நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என கேசவ விநாயகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், "நம்ம ஊரு மோடி பொங்கல்" நிகழ்ச்சியானது ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.. வருகின்ற 2026 ஜனவரி மாதம் 4,5,6,7 ஆகிய தேதிகளில், மண்டல் வாரியாக, பொங்கல் நிகழ்ச்சிகள் பொதுமக்களோடு இணைந்து நடத்தப்பட வேண்டும்.
கட்சியின் மகளிர் அணி, விவசாய அணி, விளையாட்டு பிரிவு, தமிழ் வளர்ச்சிப் பிரிவு மற்றும் கலை கலாச்சாரப் பிரிவு இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்த வேண்டும். நமது கட்சியின் கொடிகள் மற்றும் தோரணங்கள் கொண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தினை மிக பிரமாண்டமாக அலங்கரிக்க வேண்டும்.
மாவட்டத் தலைவர்கள் இதற்குரிய திட்டங்களை வகுத்து மண்டல் தலைவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஒவ்வொரு மண்டலுக்கும் மண்டல் தலைவரின் கீழ் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். மண்டல் தலைவர் முழு பொறுப்பு எடுத்து இந்நிகழ்ச்சியினை நடத்த வேண்டும்.
ஆயிரக்கணக்கான மகளிரை ஒன்றுதிரட்டி, மண்டலில் ஒரே இடத்தில் அவரவர்கள் தனித்தனியாக பொங்கல் வைத்து பொங்கல் விழாவை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட வேண்டும். கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் விளையாட்டு என விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்த முயற்சிக்கலாம். ஜல்லிக்கட்டு, சிலம்பம். மங்கள இசை,கிராமிய நடனங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்றவை நடத்தலாம். முன்னாள் மற்றும் இந்நாள் பொறுப்பாளர்களை, குடும்பத்துடன் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உறுப்பினர் சேர்க்கை ஏற்பாடு இருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் சேர்ந்து ஒவ்வொரு மண்டலுக்கும் முக்கிய விருந்தினரை முடிவு செய்து கொடுக்க வேண்டும். நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிட வேண்டும். மாநிலத் தலைமைக்கும் அனுப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






