பொது இடங்களில் வைக்கப்படும் கட்சிக்கொடி கம்பங்கள் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
சென்னை,
மதுரையில் அ.தி.மு.க. கட்சிக்கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி கோரிய வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வு, தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான நிலங்களில் அனுமதியின்றி அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை ஏப்ரல் 28-ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சில மாவட்டங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாகவும், சில மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 5 மாதங்கள் கடந்தும், அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்கள் முழுமையாக அகற்றப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் பொது இடங்களில் கொடி கம்பங்கள் அமைப்பதற்கு ஏதேனும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சாலையோரங்களில் நடப்படும் கொடி கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடி கம்பங்கள் அமைக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.
அதோடு, அரசு இடங்களில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், ஜூலை 2-ந்தேதிக்குள் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் தெரிவித்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 2-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.






