ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48 வயது). இவருடைய மனைவி பானுமதி (45 வயது). குமார், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். அவர் தனது வலது கழுத்து பகுதியில் உள்ள கட்டியால் மிகுந்த அவதியடைந்து வந்தார். இதற்காக கடந்த 14-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் டவர் ஒன்று, 5-வது மாடியில் உள்ள காது, மூக்கு, தொண்டை வார்டில் அவர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பெற்று வந்த வார்டின் ஜன்னல் அருகே சென்ற குமார், திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவன் தலைமையிலான போலீசார், குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குமார் தனது கழுத்தில் உள்ள கட்டியால் மிகுந்த வலியை அனுபவித்து வந்ததும், இதனால் மனவேதனை அடைந்த அவர், 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. உயிரிழந்த குமாருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.






